வானங்களையும் - பூமியையும் 6 நாட்களில் படைத்ததாக குர்ஆனின் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அத்தியாயம் ஃபுர்ஸிலாத்தில் வானங்களும் - பூமியும் 8 நாட்களில் படைக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இது முரண்பாடு இல்லையா?. மேலும் அதே வசனத்தில் பூமியை ஆறு நாட்களில் படைத்ததாகவும் - பின்னர் இரண்டு நாட்களில் வானங்களை படைத்ததாகவும் குறிப்பிடப் பட்டுள்ளது. வானங்களும் - பூமியும் ஒரே நேரத்தில் உருவாயின என்று அறிவியல் கூறும் 'பெரும் வெடிப்பு விதிக்கு' (Big Bang Theroy) மாற்றமாக இந்த வசனம் அமைந்துள்ளதா இல்லையா?
பதில்!
வானங்களையும் - பூமியையும் ஆறு நாட்களில் (அதாவது ஆறு நீண்ட காலங்களில்) படைக்கப்பட்டன என அருள்மறை குர்ஆன் சொல்கிறது என்பதை நானும் ஏற்றுக் கொள்கிறேன். இது பற்றிய விபரம் அருள்மறை குர்ஆனின் கீழக்குறிப்பிட்ட அத்தியாயங்களில் விளக்கப்பட்டுள்ளது.
அத்தியாயம் 7 ஸுரத்துல் அஃராஃபின் 54வது வசனம்
அத்தியாயம் 10 ஸுரத்துல் யூனுஸின் 3வது வசனம்
அத்தியாயம் 11 ஸுரத்துல் ஹுதுவின் 7வது வசனம்
அத்தியாயம் 25 ஸுரத்துல் ஃபுர்கானின் 59வது வசனம்
அத்தியாயம் 32 ஸுரத்துல் ஸஜ்தாவின் 4வது வசனம்
அத்தியாயம் 50 ஸுரத்துல் கஃப்வின் 38வது வசனம்
அத்தியாயம் 57 ஸுரத்துல் ஹதீதின் 04வது வசனம்
ஆகிய வசனங்களில் வானங்களும் - பூமியும் ஆறு நாட்களில் (அதாவது ஆறு நீண்ட காலங்களில்) படைக்கப்பட்டன என அருள்மறை குர்ஆன் சொல்கிறது.
தாங்கள் சொல்வது போன்று வானங்களும் - பூமியும் எட்டு நாட்களில் படைக்கப்பட்டன என்கிற அர்த்தத்தில் வருகின்ற வசனம் அருள்மறை குர்ஆனின் 41வது அத்தியாயம் ஸுரத்துல் ஃபுர்ஸிலாத்தின் 9வது வசனம் முதல் 12வது வசனம் வரையிலானது. மேற்படி வசனம் கீழக்கண்டவாறு குறிப்பிடுகின்றது:
'பூமியை இரண்டே நாட்களில் படைத்தவனை நிராகரித்து அவனுக்கு இணைகளையும் நிச்சயமாக நீங்கள் தானா ஏற்படுத்துகிறீர்கள்?. அவன் அகிலத்தாருக்கெல்லாம் இறைவன் என்று (நபியே!) நீர் கூறுவீராக.'. (அல் குர்ஆன் 41: 9)
அவனே, அதன் மேலிருந்து உயரமான மலைகளை அமைத்தான்;;: அதன் மீது (சகல விதமான) பாக்கியங்களையும் பொழிந்தான். இன்னும், அதில் அவற்றின் உணவுகளை நான்கு நாட்களில் சீராக நிர்ணயித்தான். (இதைப்பற்றி) கேட்கக் கூடியவர்களுக்கு (இதுவே விளக்கமாகும்). (அல் குர்ஆன் 41: 10)
பிறகு அவன் வானம் புகையாக இருந்த போது (அதைப் படைக்க) நாடினான்: ஆகவே அவன் அதற்கும் பூமிக்கும்: 'நீங்கள் விருப்புடனாயினும், அல்லது வெறுப்பிருப்பினும், வாருங்கள்' என்று கூறினான். (அதற்கு) அவையிரண்டும் 'நாங்கள் விருப்புடனேயே வருகின்றோம்' என்று கூறின. (அல் குர்ஆன் 41: 11)
ஆகவே, இரண்டு நாட்களில் அவற்றை ஏழு வானங்களாக உயர்த்தினான். ஓவவொரு வானத்திற்கும் அதற்குரிய கடமை இன்னதென அறிவித்தான். இன்னும், உலகத்திற்கு சமீபமான வானத்தை நாம் விளக்குகள் கொண்டு அலங்கரித்தோம். இன்னும் அதனை நாம் பாதுகாப்பாகவும் ஆக்கினோம். இது யாவரையும் மிகைத்தவனும், ஞானமிக்கோனுமாகிய (இறை) வனுடைய ஏற்பாடேயாகும். (அல் குர்ஆன் 41: 12)
மேற்படி வசனங்களை மேலோட்டமாகப் படித்துப் பார்த்தால் வானங்களும் - பூமியும் எட்டு நாட்களில் படைக்கப்பட்டன என்கிற அர்த்தம்தான் தொனிக்கும்.
2. மேற்படி வசனத்தில் பயன் படுத்தப்பட்டிருக்கும் 'ஸும்ம' என்கிற அரபி வார்த்தைக்கு 'மேலதிகமாக' என்று பொருள்.
மேற்படி வசனத்தை நீங்கள் கூர்ந்து ஆராய்ந்தால் மேற்படி வசனம் இரண்டு வித்தியாசமான படைப்புகளான பூமி மற்றும் வானம் இவைகளைப்பற்றி சொல்வதை அறியலாம். மலைகள் இல்லாத பூமி இரண்டு நாட்களில் படைக்கப்பட்டது. பூமி அசையாது நிலையாக நிற்கும் பொருட்டு பூமியின் மீது மலைகளை நான்கு நாட்களில் படைத்தான். ஆக பூமியும் - அதன் மீது நிறுத்தப்பட்டிருக்கும் மலைகளும் நான்கு நாட்களில் படைக்கப்பட்டன என்பதை அருள்மறை குர்ஆனின் 41வது அத்தியாயம் ஸுரத்துல் ஃபுர்ஸிலாத்தின் ஒன்பது மற்றும் பத்தாவது வசனங்களின் பொருளாகும். மேற்படி அத்தியாயத்தின் 11 மற்றும் 12வது வசனம் கூறுவது என்னவெனில் அத்துடன் கூடி வானங்களும் இரண்டு நாட்களில் படைக்கப்பட்டது என்பதாகும். மேற்படி அத்தியாயத்தின் 11வது வசனத்தின் ஆரம்ப வார்த்தையான 'ஸும்ம' என்கிற அரபி வார்த்தைக்கு 'மேலதிகமாக' அல்லது 'பின்னர்' என இரு அர்த்தங்கள் கொள்ளலாம். குர்ஆனின் ஆங்கில மொழியாக்கங்கள் சில வற்றில் 'ஸும்ம' என்கிற அரபி வார்த்தைக்கு 'பின்னர்' என்று மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது . 'பின்னர்' என்று ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டதை ஏற்றுக் கொண்டால், பூமியும், பூமியின் மீது மலைகளும் 6 நாட்களில் படைக்கப்பட்டுப், பின்னர் இரண்டு நாட்களில் வானங்கள் படைக்கப்பட்டது என்கிற தவறான பொருளைத்தான் தரும். மேற்படி பொருள் அறிவியல் சொல்லும் 'பெரும் வெடிப்பு விதியோடு' "(Big Bang Theroy) முரண்படுவதோடு, அருள்மறை குர்ஆனின் 21வது அத்தியாயம் ஸுரத்துல் அன்பியாவின் 30வது வசனமான 'வானங்களும், பூமியும் இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்) தோம்' என்கிற வசனத்தோடும் முரண்படும்.
எனவே மேற்படி வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள 'ஸும்ம' என்கிற அரபி வார்த்தைக்கு 'மேலதிகமாக' என்று பொருள் கொள்வதுதான் பொருத்தமானதாக இருக்கும். அருள்மறை குர்ஆனை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்த அப்துல்லா யூசுப் அலி அவர்கள் 'ஸும்ம' என்கிற அரபி வார்த்தைக்கு 'மேலதிகமாக' என்றுதான் மொழியாக்கம் செய்துள்ளார். அவ்வாறு மொழியாக்கம் செய்யப்பட்ட மேற்படி அருள்மறை குர்ஆனின் வசனத்திற்கு 'மலைகளுடன் கூடிய பூமியை ஆறுநாட்களில் படைத்தான். மேலதிகமாக வானங்களையும் படைத்தான்'. என்றுதான் பொருள் கொள்ள வேண்டும். இவ்வாறு பொருள் கொள்ளும்பொழுது, எட்டு நாட்கள் என்கிற தவறான கருத்து கொள்வது தவிர்க்கப்பட்டு, ஆறு நாட்கள் என்கிற சரியான கருத்து நிலை நிறுத்தப்படுகிறது.
கீழ் குறிப்பிடும் உதாரணத்தின் மூலம் மேற்படி கருத்தை மேலும் சரியான முறையில் புரிந்து கொள்ளலாம்: ஒரு கட்டிடத்தை கட்டுபவர் - அவர் கட்டிய 10 மாடி கட்டிடத்தையும், கட்டிடத்தை சுற்றியுள்ள சுற்றுச் சுவரையும் கட்டி முடிக்க 6 மாதங்கள் எடுத்துக் கொண்டதாக குறிப்பிடுகிறார். முழுக் கட்டிடத்தையும் கட்டி முடித்த பின்பு - கட்டிடம் கட்டியது பற்றிய அறிக்கையில் கட்டிடத்தின் அடிப்பகுதிகளை கட்டி முடிக்க இரண்டு மாதங்கள் எடுத்துக் கொண்டதாகவும் - கட்டிடத்தின் மேற்பகுதியை கட்டி முடிக்க நான்கு மாதங்கள் எடுத்துக் கொண்டதாகவும் - அத்துடன் சேர்த்து - கட்டிடம் கட்டிக் கொண்டிருக்கும் பொழுதே - கட்டிடத்தின் சுற்றுச் சுவர்களையும் இரண்டு மாதங்களில் கட்டி முடித்ததாக தனது அறிக்கையில் குறிப்பிடுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். மொத்தக் கட்டிடமும் கட்டி முடிக்க அவர் எடுத்துக் கொண்ட காலம் 6 மாதங்கள் என்பதை மேற்படி அறிக்கையிலிருந்து தெளிவாக அறிந்து கொள்ளலாம். அவர் சொன்ன முதலாவது அறிக்கை - அவர் சொன்ன இரண்டாவது அறிக்கையோடு முரண்படவில்லை. மாறாக கட்டிடம் கட்டி முடித்த காலத்தை பற்றிய அதிக விபரங்களைத்தான் தெரிவிக்கிறது.
3. வானங்களும், பூமியும் ஒரே சமயத்தில்தான் படைக்கப்பட்டன:
அருள்மறை குர்ஆன் பிரபஞ்சம் முழுவதையும் படைக்கப் பட்டதை பற்றி ஏராளமான வசனங்களில் குறிப்பிடுகிறது. அருள்மறை குர்ஆனீன் 7:54, 10:3, 11:7, 25:59, 32:4, 50:38, 57:4 ஆகிய வசனங்களில் வானங்களும், பூமியும் என்றும், அருள்மறை குர்ஆனீன் 49:9-12, 2:29, 20:4 ஆகிய வசனங்களில் பூமியும், வானங்களும் என்றும் குறிப்பிடுகிறது. மேலும் அருள்மறை குர்ஆனின் 21வது அத்தியாயம் ஸுரத்துல் அன்பியாவின் 30வது வசனம் பெரும் வெடிப்பு பற்றி கூறுவதுடன், வானங்களும், பூமியும் ஒரே சமயத்தில் உருவாக்கப்பட்டன என்றும் குறிப்பிடுகிறது.
அது போன்று அருள்மறை குர்ஆனின் இரண்டாவது அத்தியாயம் ஸுரத்துல் பகராவின் 29வது வசனம் கீழக்கண்டவாறு குறிப்பிடுகிறது:
அ(வ் விறை) வன் எத்தகையவன் என்றால் அவனே உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காக படைத்தான். பின் அவன் வானத்தின் பக்கம் முற்பட்டான். அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்காக்கினான். அன்றியும் அவனே ஒவ்வொரு பொருளையும் நன்கறிபவனாக இருக்கின்றான். (அல் குர்ஆன் 2:29)
மேற்படி வசனத்திலும் 'ஸும்ம' என்கிற அரபி வார்த்தைக்கு 'பின்னர்' என்று பொருள் கொள்வோம் எனில் - இந்த வசனமும் பெரும் வெடிப்பு விதியுடன் முரண்படுவதோடு, வானங்களையும், பூமியையும் படைத்தது பற்றிக் குறிப்பிடும் அருள்மறை குர்ஆனின் மற்ற வசனங்களுடனும் முரண்படும். எனவே ஸுரத்துல் ஃபுர்ஸிலாத்தின் குறிப்பிட்ட வசனத்தில் வரும் 'ஸும்ம' என்கிற அரபி வார்த்தைக்கு 'மேலதிகமாக' அல்லது 'அத்துடன் சேர்த்து' என்று பொருள் கொள்வதுதான் பொருத்தமானதாக இருக்கும்.
-டாக்டர் ஜாகிர் நாய்க்
Friday, April 3, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment